டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டிப்பது. டீசல் விலையேற்றத்தால் மீன்பிடி தொழில் முற்றிலும் நஷ்டமாகி வருகிறது. அதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முதல் நாகை மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக கரைகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் நாகை கடுவையாற்றுக்கரையில் ஏராளமான விசைப் படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அந்த ஆர்ப்பாட்டத்திலேயே அடுத்த கட்ட போராட்டத்தினை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com