

ராமநாதபுரம்:
தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை பயன்படுத்தி மீன் வளத்தை அழிப்பதாகவும், விசைப்படகு மீனவர்கள் வாரத்தின் 6 நாட்கள் மீன் பிடிப்பதாலும், மீன்பிடி சட்டத்திற்கு மாறாக கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவிற்குள் கரைவரை வந்து மீன் பிடிப்பதாலும் நாட்டுப் படகு மீனவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் உள்ளன.
இந்த சூழலில் ராமநாத புரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள், ஏராளமானோர் ராமநாதபுரம் மாவட்ட அனைத்து நாட்டுப்படகு சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் அருள் தலைமையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்
மீன்வளத்துறை துணை இயக்குனர் ஐசக் ஜெயக்குமார் தலைமையில், மண்டபம் உதவி இயக்குனர் கோபிநாத், ராமநாதபுரம் (தெற்கு) உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சின்ன ஏர்வாடி நாட்டுப்படகு சங்க செயலாளர் முத்துநாகு, முன்னாள் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:-
ஏர்வாடி பகுதியில் விசைப்படகு வைத்திருப் போர் கட்டுப்பாட்டுடன் உள்ளனர். மண்டபம் பகுதியில் இருந்து தான் 60-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நாட்டுப்படகு மீனவர்களை பாதிக்கும் வகையில் தடை செய்யப் பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தியும், கரை வரை வந்தும் மீன் பிடிக்கின்றனர். இதற்கு சிலர் உடந்தையாக உள்ளனர் என்றனர்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews