4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் 4-வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஓய்வெடுக்கும் விசைப்படகுகள்.
ராமேசுவரத்தில் 4-வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஓய்வெடுக்கும் விசைப்படகுகள்.
Published on

ராமேசுவரம்:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்புகின்றன. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக இதே நிலை நீடித்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பாம்பன் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசி வருகிறது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

ராமேசுவரம் செல்ல வேண்டிய அனைத்து ரெயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ராமேசுவரம்-சென்னை அதிவிரைவு ரெயில், ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் ராமேசுவரத்தில் இருந்து பயணிகள் இன்றி மண்டபம் வரை கொண்டு செல்லப்பட்டது.

அப்போது பாம்பன் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டன. மண்டபத்திற்கு வந்தபின் அங்கிருந்து ரெயில்கள் பயணிகளுடன் சென்னை, மதுரைக்கு புறப்பட்டன.

அதே நேரத்தில் இரவு 8.15 மணிக்கு செல்ல வேண்டிய ராமேசுவரம் -சென்னை சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-அஜ்மீர் ஆகிய ரெயில்கள் காற்றின் வேகம் காரணமாக தாமதமாக இரவு 11 மணிக்கு இயக்கப்பட்டன.

4-வது நாளான இன்று காலையும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தனுஷ்கோடியில் பலத்த காற்று வீசிவருவதால் மணல்கள் சாலைகள் முழுவதும் பரவி உள்ளன.

இதன் காரணமாக வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com