

ராமேசுவரம்:
இந்திய-இலங்கை கடல் எல்லையில் உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழாவிற்கு உரிய அனுமதி பெற்று தமிழக மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா, பிப்ரவரி 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், நாட்டுப்படகு மீனவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மேலும் கச்சத்தீவு விழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பாரம்பரிய மீனவர் சங்கம் அறிவித்தது. அதன்படி இன்று ராமேசுவரம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்திற்கு அவர்கள் திரண்டு வந்தனர். ஆனால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனை தொடர்ந்து பரரம்பரிய மீனவர் சங்க பொறுப்பாளர் சின்னத்தம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த ஜெரோன்குமார், நாம் தமிழர் டொமினிக் ரவி மற்றும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர். #tamilnews