

பாகூர்:
புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் பிரபு, மீனவர். இன்று அதிகாலை இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரும் வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த பிரகாஷ் என்ற ஊத்துக்காட்டான் மற்றும் மணி, சுதர்சன் ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்த போது கடல் சீற்றம் காரணமாக இவர்களது படகு கவிழ்ந்தது. இதில் படகின் அடியில் பிரகாஷ் சிக்கி கொண்டார். மற்ற 3 பேரும் அவரை மீட்க முயன்றும் இயலவில்லை. இதையடுத்து அவர்கள் உயிர்பிழைக்க நீந்தி கரையேறினர். பின்னர் அங்கிருந்த மீனவர்களை அழைத்து கொண்டு மற்றொரு படகில் அங்கு சென்றனர்.
அங்கு படகின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த பிரகாசை மீட்டு வந்தனர். அதன்பிறகு அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பிரகாசுக்கு நீலா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews