

ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 30-ந் தேதி அன்று தனிஸ்லாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜோகன், சேது பாண்டி, யுனெஸ்கோ, காட்சன், இமானுவேல், இன்னாசி, ஸ்வித் ஆகிய மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் இருந்து மீனவர் காட்சன் (வயது 23) தவறி கடலில் விழுந்தார். அவரை கண்டுபிடிக்கும் வரையிலும் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்து வேலைநிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீனவர் காட்சன் உடல் இலங்கை யாழ்பாணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தகவல் தெரிவித்து புகைப்படத்தையும் வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உறவினர்கள் அந்த உடலை அடையாளம் பார்த்து இறந்த மீனவர் காட்சன் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். அவரது உடலை ராமேசுவரத்திற்கு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.