திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் வீட்டுக்கு தீ வைப்பு-உறவினர்கள் 2 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் வீட்டுக்கு தீ வைத்ததில் தூங்கி கொண்டிருந்த உறவினர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ வைப்பு
தீ வைப்பு
Published on

காக்கிநாடா:

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யவேணி. இவரது உறவினர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சீனிவாஸ். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக சத்யவேணியின் இளைய மகளை சீனிவாஸ் திருமணம் செய்ய விரும்பினார்.

இதற்கு சத்யவேணியும் ஒப்புக் கொண்டார். அதன் பிறகு சீனிவாசின் நடவடிக்கைகள் சரி இல்லாததால் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். மேலும் சத்யவேணி தனது இளைய மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாஸ் அடிக்கடி சத்யவேணியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 17-ந்தேதி வீடு புகுந்து சத்யவேணியின் குடும்பத்தினரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தினார். இதில் ஒருவர் காயம் அடைந்து இருந்தார்.

இதற்கிடையே சத்யவேணியின் மூத்த மகள் துர்கா பவானி தனது 3 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு சத்யவேணி, தனது மூத்த மகள், பேரன், பேத்தி மற்றும் மகன் ராமு ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சீனிவாஸ் பெட்ரோலை சத்யவேணியின் வீடு மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார்.

இதில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது. வீட்டுக்குள் இருந்த 6 பேரும் தீயில் சிக்கி கருகி அலறினார்கள்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் 6 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதில் ராமு (18), துர்கா பவானியின் மகள் விஜயலட்சுமி (5) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்யவேணி, துர்கா பவானி ஆகியோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தப்பி ஓடிய சீனிவாஸ் நேற்று பெட்ரோல் பங்க்கில் இருந்து பெட்ரோல் வாங்கி செல்லும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com