

கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் லால்குடி செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் அருகே இறைச்சி கடைகள் உள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த இறைச்சி கடைக்கு இறைச்சி வாங்குவதற்காக ஏராளமானோர் தங்களது மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர்.
மோட்டார் சைக்கிள்களை சாலையில் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பி அருகில் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி மோட்டார் சைக்கிளின் பதிவு எண்களை குறித்து வைத்து அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த வாகனத்தின் உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் தங்களது மோட்டார் சைக்கிள்களை அந்த இடத்திலிருந்து எடுப்பதற்காக முண்டியடித்தனர். இதனால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு கீழே விழுந்தனர். இதனால் போலீசார் எந்திரத்தில் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு பின்னர் அபராதம் போடுவதற்காக தங்களது செல்போனில் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்களை போட்டோ எடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், சாலையின் ஓரத்தில்தான் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இறைச்சி கடைக்கு அருகில் உள்ள காலி இடத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். எவ்வாறு அபராதம் விதிக்க முடியும் முறையாக தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை பலகை வைத்த பிறகு சாலை விதிகளை மீறுவோர் மோட்டார் சைக்கிளுக்கு அபராதம் விதிக்குமாறு கேட்டு போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.