அதிராம்பட்டினம் அருகே விவசாயி நிலத்தில் பழமையான நந்தி சிலை கண்டெடுப்பு

அதிராம்பட்டினம் அருகே விவசாயி நிலத்தில் பயிரிடுவதற்காக உழவு செய்தபோது பழமையான நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
Published on

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருக்குச் சொந்தமான விவசாயநிலம் அதே பகுதியில் உள்ளது. இந்நிலையில் அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக உழவு செய்தபோது அந்த இடத்தைச்சுற்றி சுமார் முக்காலடி ஆழத்தில் மன்னர் காலத்து செங்கற்கள் தென்பட்டது.

இதுபற்றி ராஜேந்திரன் தனது தந்தை சின்னத்தம்பியிடம் கூறினார். அதற்கு சின்னத்தம்பி நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே அதே வயலில் நந்தி வடிவில் சிலை ஒன்று இருந்தது என்று கூறி ராஜேந்திரனை வயலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது அவர் அந்த இடத்தை சுற்றி ஒன்றரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டிய போது கருங்கல்லாலான நந்தி வடிவ சிலை தெரிந்தது. இதையடுத்து ராஜேந்திரன் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். 

உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இந்த நந்தி இருந்த இடத்திற்கு எதிரே வெள்ளை ஏரி கன்னி என்ற குளம் உள்ளதோடு அந்தக்கால செங்கற்கள், நந்தி என உள்ளதால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மிகப்பெரிய கோவில் இருந்திருக்கலாம். நாளடைவில் இந்த இடம் புதையுண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கருங்குளம் பகுதியில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு பெருமாள் சிலையும், முடுக்குக்காடு பகுதியில் அம்மன் சிலை, விநாயகர் சிலை மற்றும் முருகன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

அது போன்று பழஞ்சூர் கிராமத்தில் சிவன் கோவில் திருப்பணி வேலைக்காக போர்வெல் அமைப்பதற்கு மண்வெட்டிய போது அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக சிலைகள் கண்டெடுக்கப்படுவதால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்தால் மேலும் பல விலை மதிப்புள்ள பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com