

ஆரணி:
ஆரணி அடுத்த குன்னத்தூரை சேர்ந்தவர் பழனி. அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு பிரியதர்ஷினி, நந்தினி, காவியா என 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
காவியாவிற்கும், சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை திருமணம் நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பழனி குடும்பத்தார் அனைவரும் வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டனர். மீண்டும் திருமணம் முடிந்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு குன்னத்தூர் வந்தனர். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. பழனி குடும்பத்தினர் மகளின் திருமணத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.