

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் 15-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.
அரசு பஸ் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளன.
அண்ணா தொழிற்சங்கம் தவிர தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஐ.என்.டி.யு.சி., பாட்டாளி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற வைக்கும் நோக்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார்.
இதில் போக்குவரத்து கழக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 4 கட்டமாக பேச்சு நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டப்படி 15-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து தொழிலாளர்கள் சமாதானப்படுத்தும் வகையில் அரசு சார்பில் உடனடியாக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் அதனை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஓய்வூதிய நிலுவைத்தொகை ரூ.1700 கோடி, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவைக்கு ரூ.4500 கோடி என மொத்தம் ரூ.7000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
இதனால் தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர் நல வாரிய துணை ஆணையர் யாஸ்மின்பேகம் தலைமையில் போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது.
தொழிற்சங்க நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து போராட்டத்தை கைவிட்டு விட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.
தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடந்தால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுவதோடு பொது மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கோடை விடுமுறை நேரத்தில் பஸ் போக்குவரத்தின் அவசியத்தை எடுத்து கூறி போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தப்பட்டது.
இதை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக உள்ளன.
இந்த நிலையில் இன்று மீண்டும் இறுதிக்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.
மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், அண்ணா தொழிற்சங்கம் ஆர்.சின்னசாமி, தொ.மு.ச. சண்முகம், சி.ஐ.டி.யு. ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி. லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் இந்த பிரச்சினையில் உடன்பாடு காண வேண்டும் என்ற அடிப்படையில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டப்படி 15-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறும். இதுபற்றி இன்று மாலையில் இறுதி முடிவு தெரிய வரும்.
பேச்சுவார்த்தை முறிந்தாலும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1½ லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். மொத்தம் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 2 கோடி பேர் அரசு பஸ்களில் பயணம் செய்கிறார்கள். வேலை நிறுத்தம் நடைபெற்றால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். கோடை விடுமுறை என்பதால் வெளியூர் செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “போக்குவரத்து கழகங்கள் நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவு அதிகம் போன்ற காரணங்களால் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.
குறிப்பாக விபத்து இழப்பீடுக்கு பெரும் தொகை செலவாகிறது. பொதுமக்கள் நலன் கருதி பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது. மேலும் இலவச பஸ் பாஸ் போன்றவற்றாலும் இழப்பு ஏற்படுகிறது. அரசு மானியமும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே போக்குவரத்து கழகங்கள் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாக தெரிவித்தனர்.