தஜிகிஸ்தான் நாட்டிற்குள் நுழைய முயன்ற 15 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தஜிகிஸ்தான் நாட்டிற்குள் நுழைய முயன்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேரை அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் (கோப்பு படம்)
ஐ.எஸ். பயங்கரவாதிகள் (கோப்பு படம்)
Published on

துஷன்பே:

தஜிகிஸ்தான் மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கே ஆப்கானிஸ்தான், மேற்கே உஸ்பெகிஸ்தான், வடக்கே கிர்கிஸ்தான், மற்றும் கிழக்கே சீனா ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் எல்லையோரம் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் தஜிகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தஜிகிஸ்தான் எல்லைக்குள் நுழையும் நோக்கில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 2 பேர் மரணமடைந்தனர். மேலும், 5 பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர்.  

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com