பெண் வருவாய் ஆய்வாளர் தீக்குளித்து தற்கொலை வழக்கு: கணவர்-மாமியார் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

பெண் வருவாய் ஆய்வாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண் வருவாய் ஆய்வாளர் தீக்குளித்து தற்கொலை வழக்கு: கணவர்-மாமியார் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை
Published on

பெரம்பலூர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் மகன் இளைய ராஜா (வயது 35). இவருக்கும் முசிறியை அடுத்த அழகாபட்டியை சேர்ந்த நிர்மலா (26) என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

அப்போது இளையராஜா நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகவும், நிர்மலா பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவிலுள்ள வரகூர் பிர்காவின் வருவாய் ஆய்வாளராகவும் பணிபுரிந்து வந்தனர்.

நிர்மலா பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் தனியாக குடியிருந்து வந்தார். வாரம் ஒருமுறை இளையராஜா மனைவியை பார்க்க பெரம்பலூர் வந்து சென்றார்.

திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு உருவானது. இதில் இளைய ராஜாவுக்கு ஆதரவாக அவரது தாய் தங்கம்மாள், அண்ணி மலர் ஆகியோர் சேர்ந்து கொண்டு நிர்மலாவை தகாத வார்த்தைகளால் திட்டி, சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2014 டிசம்பர் 24-ந்தேதி பெரம்பலூர் வெங்கடேசபுரம் வந்த இளையராஜாவுக்கும், நிர்மலாவுக்கும் கடும் வாக்குவாதத்துடன் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி நிர்மலா தனது தந்தை ராஜூவுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தார்.

அப்போது மாமனாரின் கண்முன் நிர்மலாவைத் தாக்கிய இளையராஜா, அதனைத் தடுக்க வந்த ராஜூவையும் தாக்கியுள்ளார். தனது அப்பா கண்முன் தாக்கப்பட்டதால் மனமுடைந்த நிர்மலா ஆத்திரமடைந்து தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிர்மலாவிடம் அப்போதைய குற்றவியல் நீதிபதி சுரேஷ் வாக்குமூலம் பெற்றார். பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து செய்தனர். வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், குற்றம் சாட்டப்பட்ட இளைய ராஜா, தங்கம்மாள், மலர் ஆகிய மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அதனை செலுத்தத் தவறினால் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் வழக்கில் பாதிக்கப்பட்ட நிர்மலாவின் பெற்றோருக்கு ஏற்பட்ட மன ரீதியான பாதிப்பிற்கு தகுந்தபடி இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு நிர்ணயம் செய்து விரைந்து வழங்க, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விரைந்து நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தும் தீர்ப்பளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com