பெண் ஊராட்சி தலைவர் கலெக்டரிடம் மனு

துணைத்தலைவரின் உரிமையை அதிகாரிக்கு வழங்கக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் பெண் ஊராட்சி தலைவர் மனு கொடுத்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பெருகமணி ஊராட்சி. இங்கு ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த கிருத்திகா என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவர் மீது ஊழல் புகாரை 8-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் என்பவர் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கிருத்திகா தன்மீது வார்டு உறுப்பினர் வேண்டுமென்றே அவதூறு பரப்பி புகார் கொடுத்திருப்பதாகவும், தான் ஆதிதிராவிடரை சேர்ந்தவர் என்பதால் தன்னை துணைத்தலைவர் உள்பட எந்த உறுப்பினர்களும் மதிப்பதில்லை என்றும் அவதூறு பரப்பிய வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில் கிருத்திகா நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் ‘நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் என்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். ஒவ்வொரு பணிக்கான ஒப்புதல் பெறும் போதும் துணைத்தலைவரிடம் போராடித்தான் கையெழுத்து வாங்க வேண்டி உள்ளது. எனவே பிரச்சினை முடியும் காலம் வரை துணைத்தலைவர் கையெழுத்திடும் உரிமையை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் வழங்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com