ஜெயிலில் சொகுசு வாழ்க்கை: சசிகலா வீடியோவை வெளியிட்டது பெண் காவலர்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வண்ண உடைகளில் வலம் வந்த வீடியோ காட்சியை பெண் காவலர் ஒருவர் வெளியிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜெயிலில் சொகுசு வாழ்க்கை: சசிகலா வீடியோவை வெளியிட்டது பெண் காவலர்
Published on

பெங்களூரு:

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கு வண்ண உடைகளில் வலம் வந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனலில் ஒளிபரப்பானது.

சசிகலா நைட்டியில் ஷாப்பிங் சென்றுவிட்டு கையில் துணிப்பையை வைத்துக் கொண்டு ஒய்யாரமாக நடப்பதையும் அவருடன் சிறை அதிகாரி அனிதாராய் மற்றும் இளவரசி ஆகியோர் நடந்து வரும் காட்சியும் ஒளிபரப்பானது.

அவருக்கு 5 சொகுசு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்த காட்சியும் ஏற்கனவே ஒளிபரப்பானது. அந்த அறைகளில் பயன்படுத்தப்படும் குக்கர், பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள், துணிப்பைகள் ஆகியவையும் அந்த வீடியோ காட்சிகளில் ஒளிபரப்பானது.

இதுதவிர சுடிதார் அணிந்த சசிகலா தோளில் பையை போட்டுக் கொண்டு ஜெயில் வளாகத்தில் நடந்து செல்வது போன்றும் அவரை கைதிகள் வேடிக்கை பார்ப்பது போன்ற வீடியோ காட்சிகளும் வெளியாகின.

இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் செல்போனில் பதிவு செய்யப்பட்டு கன்னட டிவி. சேனலின் நிருபர் ஒருவருக்கு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சசிகலா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை படம் எடுத்தது அவருடன் தங்கி இருந்த மேரி உள்ளிட்ட 2 கைதிகள் என்று கர்நாடக சிறைத்துறை போலீசார் நம்பினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் அந்த காட்சியை எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.

மேலும் சசிகலாவுக்கு உணவு பரிமாறிய பெண் காவலர் அந்த காட்சியை பதிவு செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. ஆனால் அவர் அந்த காட்சியை பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வீடியோ காட்சி வெளியான விவகாரம் குறித்து தனியாக விசாரணை நடத்த உளவு பிரிவு குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்த குழுவினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஒரு பெண் காவலர் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டது தெரிய வந்துள்ளது.

சசிகலா தங்கி உள்ள அறையை சுற்றி பாதுகாப்பு பணியில் சிறை பெண் காவலர்கள் 24 மணிநேரமும் 3 ஷிப்டுகளாக பணியில் ஈடுபட்டனர். இதில் எந்த பெண் காவலர் அந்த வீடியோவை எடுத்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பொதுவாக பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள ஆண்கள் சிறையில் கைதிகளிடம் செல்போன் புழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் அதே வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில் செல்போன் புழக்கம் குறைவு. கைதிகளைவிட சிறை காவலர்கள் தான் அதிக அளவில் செல்போனை வைத்திருப்பார்கள்.

இதனால் சிறைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஒரு பெண் காவலர் தான் இந்த படத்தை எடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மற்றும் டி.வி. சேனல் நிருபரிடம் கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது.

சசிகலா சிறைக்கு வந்த பிப்ரவரி 15-ந் தேதி முதல் சிறையில் உள்ள காவலர்களுக்கும் பணம் சென்று வந்தது. டி.ஜி.பி.க்கு நேரடியாக பணம் சென்றுவிட்டதால் சிறை காவலர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் சிறை காவலர்களில் ஒருவர் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் கைதிகளுக்குள் இரு கோஷ்டிகள் இருப்பது போல சிறை காவலர்கள் மத்தியிலும் இரு பிரிவினர் இருப்பதால் இந்த சிறைத்துறை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து கர்நாடக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com