

தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளும் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் திருநாவுக்கரசர் தனது அறையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் சத்தியமூர்த்திபவன் வளாகத்தில், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி கவுரி கோபாலுக்கும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் ஹசீனா சயத்துக்கும் இடையே நிர்வாகிகள் தேர்வு சம்பந்தமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் மிக மோசமாக வசைபாடிக்கொண்டனர்.
இது தொடர்பாக திருநாவுக்கரசரிடம் புகார் செய்யப் போவதாக கூறி கவுரி கோபால் கட்சி அலுவலகத்திற்குள் சென்றார். இந்த நேரத்தில் ஹசீனா சயத் தனது கணவரை கட்சி அலுவலகத்திற்குள் அழைத்து வந்தார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, முற்றியது. இதில் கவுரி கோபால் தாக்கப்பட்டார். ஹசீனா சயத்தின் கணவர் தன்னை கன்னத்தில் அறைந்து விட்டதாக கவுரி கூறி, கதறி அழுதார்.
அந்த நேரத்தில் மகளிர் காங்கிரஸ் மாநிலத்தலைவி ஜான்சிராணி மற்றும் பெண் நிர்வாகிகள், ஹசீனா சயத் கணவரிடம், ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டனர். அந்த நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், ஜான்சிராணி பிடித்து தள்ளப்பட்டார். ஹசீனா சயத் ஆதரவாளர்களும், ஜான்சிராணி ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். யார்? யாரை? தாக்குகிறார்கள் என்பதே தெரியவில்லை.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த சம்பவம் அரங்கேறியது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து மகளிர் அணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவியாக இருப்பவரை மாற்றி விட்டு தன்னுடைய ஆதரவாளரை நியமிக்க ஹசீனாசயத் முடிவு செய்தார். இந்த விஷயம் தொடர்பாக தான் இங்கு மோதல் நடந்துள்ளது’ என்றார்.
இந்த மோதல் நடந்து கொண்டிருந்தபோது, திருநாவுக்கரசர் தனது அறையிலேயே இருந்தார். அவரிடம் சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:-
மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறினார்கள். இது குறித்து இரு தரப்பிலும் விளக்கம் கேட்கப்படும். மோசமான சம்பவங்கள், தாக்குதல் நடந்திருந்தால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மேலும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவிக்கும் இது குறித்து கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.