குடும்ப கட்டுப்பாடு இழப்பீடு வழங்க லஞ்சம்: பெண் உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

குடும்ப கட்டுப்பாடு இழப்பீடு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் பெண் உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் மகேஷ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் கடந்த 2005-ம் ஆண்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதனிடையே 2011-ம் ஆண்டு அவர் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து மகேஷ்வரி அதே ஆஸ்பத்திரியில் கருவை கலைத்து கொண்டார். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் தவறு நடந்தால் அரசால் இழப்பீடு தொகை ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த இழப்பீடு தொகையை பெறுவதற்காக மகேஷ்வரி சேலம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கு உதவியாளராக பணியாற்றிய கலா பொன்னுசாமி (வயது 52) என்பவர் இந்த தொகையை வழங்க அந்த பெண்ணிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதை கொடுக்க விரும்பாத மகேஷ்வரியின் தந்தை மணி இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி மகேஸ்வரியிடம் இருந்து கலா பொன்னுசாமி ரூ.2,500 லஞ்சம் பெற்ற போது அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கலா பொன்னுசாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com