மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் நகை பறிப்பு

மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

சூரமங்கலம்:

சேலம் நரசோதிப்பட்டி அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சுபா‌ஷினி (வயது 18). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாணவி, தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அந்த சமயத்தில் அவர்களை பின் தொடர்ந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

ரெட்டிப்பட்டி அருகே வந்தபோது, அந்த மர்ம நபர்கள் ராஜேந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் அருகில் வந்து சுபா‌ஷினி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து சென்றனர். பின்னர் அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com