சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை

சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான்குளம் அருகே உள்ள சில்லிகுளத்தை சேர்ந்தவர் குட்டிராஜ் (வயது 58), விவசாயி. இவருடைய மகன் செந்தில்குமார் (31). கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய இவருக்கு கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊரில் உள்ளவர்களிடம் தகராறு செய்வாராம். மேலும் ஊரில் நிறுத்தி இருந்த கார் கண்ணாடியை கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இவரை பற்றிய ஊர்க்காரர்களின் புகாரால் குட்டிராஜ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் செந்தில்குமார் நேற்று முன்தினம் தனது சித்தப்பா சிங்கராஜ் வீட்டுக்கு சென்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த குட்டிராஜ் தனது மகனை தேடி சென்றுள்ளார். அப்போது ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள கோவிலில் இருந்த செந்தில்குமாரை கண்டதும் கண்டித்துள்ளார். பின்னர் செந்தில்குமாரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமாரை அப்பகுதியினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்டிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com