மதகடிப்பட்டில் தந்தை- மகன் தற்கொலை

மதகடிப்பட்டில் வட்டிக்கு பணம் வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தந்தை- மகன் தற்கொலை செய்து கொண்டனர்.
மதகடிப்பட்டில் தந்தை- மகன் தற்கொலை
Published on

திருபுவனை:

மதகடிப்பட்டு புது நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர், கடலூர் செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி. அவர் 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பவித்ரா (24), சவுந்தர்யா (20) ஆகிய மகள்களும், சவுந்தர் (19) என்ற மகனும் உள்ளனர்.

இதில், பவித்ராவுக்கு திருமணமாகி விட்டது. ஆனந்தனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சமீப காலமாக குடிப்பழக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் ஓட்டலை சரியாக கவனிக்க வில்லை. மகள் சவுந்தர்யா, மகன் சவுந்தர் ஆகியோர் தான் ஓட்டலை கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆனந்தன் ஒரு நபரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால், அதை சரியாக செலுத்தவில்லை. அவர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.

இதனால் தந்தை வாங்கிய கடனை நான் செலுத்துகிறேன் என கூறி சவுந்தர் அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்தி வந்தார்.

இந்த வி‌ஷயம் ஆனந்தனுக்கு தெரியாது. நேற்று அவரது கவனத்துக்கு தெரிய வந்தது. இதனால் மகன் மீது கோபம் அடைந்தார்.

கடைக்கு வந்த ஆனந்தன் மகனிடம் எனக்கு தெரியாமல் எப்படி பணம் கொடுக்கலாம்? என தகராறு செய்தார். அங்கிருந்த மரக் கட்டையை எடுத்து அடிக்க போனார். அதை சவுந்தர் பிடுங்கி எறிந்தார்.

அப்போது ஆனந்தன் கை பிசகி விட்டது. இதில் கடும் கோபம் அடைந்த அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்த சம்பவத்தால் வேதனை அடைந்த சவுந்தர் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது யாருக்கும் தெரியாது.

சிறிது நேரம் கழித்து ஆனந்தன் ஓட்டலுக்கு வந்தார். மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலைதான் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட வி‌ஷயம் வெளியே தெரியவந்தது.

இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ் பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com