

திண்டுக்கல்:
கொடைக்கானல் வனப்பகுதியில் மான், யானை, முயல் உள்பட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் உள்ளன.
சிலர் திருட்டுத்தனமாக வன விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பதிவு பெறாமல் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர்.
கொடைக்கானல் அருகே அடுக்கம் வனப்பகுதியில் சிலர் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாடி வருவதாக கொடைக்கானல் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து ரேஞ்சர் ஆனந்த் தலைமையிலான ஊழியர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் ஒரு கும்பல் சுற்றிதிரிந்தபோது வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அதில் 2 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அருளப்பன், அவரது மகன் யாகப்பன் என தெரிய வந்தது.
மேலும் அவர்கள் வீட்டில் 60 தோட்டாக்கள் மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்ததும் தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 2 பேரிடமும் நாட்டு துப்பாக்கிகளை வைத்து வேட்டையில் ஈடுபட்டனரா? எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நக்சலைட்டு மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள நிலையில் நாட்டு துப்பாக்கியுடன் கும்பல் சுற்றிதிரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.