

பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூதராயநல்லூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (40). விவசாய தொழிலாளி. இவர் வீட்டில் தூக்குமாட்டி இறந்து விட்டார். இறந்து போன சின்னத்துரையின் உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்து விட்டனர். இறந்த போன சின்னத்துரையின் சாவில் மர்மம் உள்ளது என்று அவரது உறவினர் ஆனந்த என்பவர் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய் திருந்தார்.
இவரதுபுகாரின் பேரில் நேற்று காலை பூதராயநல்லூர் கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இறந்து அடக்கம் செய்யப்பட்ட சின்னத்துரையின் உடல் தோண்டு எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. பூதலூர் தாசில்தார் சிவக்குமார். திருக்காட்டுப் பள்ளி போலீஸ் இன்ஸ் பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், திருக்காட்டுப்பள்ளி வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட உடலை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை டாக்டர் விமல்ராஜ் அதே இடத்தில் பரிசோதனை செய்தார். பின்னர் உடலை இறந்த சின்னத்துரையின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே மேல் நடவடிககை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். புதைத்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.