தமிழை நன்றாக பேசும் ஒரே அரசியல்வாதி கமல்- ரசிகர்கள் புகழாரம்

கருணாநிதிக்கு பிறகு தமிழை நன்றாக பேசும் ஒரே அரசியல்வாதி கமல்ஹாசன் என அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழை நன்றாக பேசும் ஒரே அரசியல்வாதி கமல்- ரசிகர்கள் புகழாரம்
Published on

சென்னை:

நடிகராக இருந்த கமல்ஹாசன் அரசியல் வாதியாக மாறினார். மதுரையில் நடந்த விழாவில் அவர் கட்சி சின்னம், கொடியை அறிவித்தார். கட்சியின் தொடக்க விழாவில் அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அவரது ரசிகர்கள் கமல்ஹாசனின் அரசியல் பயணம், அவரது பேச்சு குறித்து கருத்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரம்,

அப்துல்காதர்: நான் தூத்துக்குடியில் இருந்து கமல்ஹாசன் பேச்சை கேட்க வந்துள்ளேன். அவரது தமிழ் மிகவும் நன்றாக இருக்கிறது. கருணாநிதிக்கு பிறகு தமிழை நன்றாக பேசும் ஒரே அரசியல்வாதி கமல்ஹாசன்.

சுந்தரி (மதுரை): கமல்ஹாசனின் பேச்சு அரசியல்வாதியின் பேச்சு போல் தெரியவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் இருந்து பேசுகிறார். ஆனால் அரசியல் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. ஓட்டுக்கு பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பவர்கள் அதில் இருந்து மீள்வார்களா? என்று தெரியவில்லை.

ராஜ்குமார் (மதுரை): ஜெயலலிதாவுக்கு பிறகு சிறந்த தேர்வு கமல்ஹாசன்தான். அடுத்த தேர்தலில் எனது ஓட்டு அவருக்குத்தான்.

ரமேஷ் (திண்டுக்கல்): ஊழலுக்கு எதிராக களம் இறங்கி உள்ளார். எனது ஓட்டு அவருக்குத்தான். ஏனென்றால் கமல்ஹாசன் சிறந்த தலைவராக உருவாகி உள்ளார்.

செவனாயி (விருதுநகர்): நான் எப்போதும் அம்மாவுக்குதான் ஓட்டு போட்டேன். தற்போது அவருக்கு மாற்றாக கமல்ஹாசன் உள்ளார். அவர்தான் சிறந்த தேர்வு. ஏழை மக்களுக்கு உதவுவார்.

பிரகாஷ், மகேஷ்பாபு (அவினாசி): நாங்கள் இருவரும் சிவில் என்ஜினீயர்கள். நாங்கள் இதற்கு முன்பு அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டோம் ஜெயலலிதாவுக்காகத்தான் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தோம். தற்போது அவர் இல்லை. தமிழ்நாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் கமல்ஹாசன் தான் தற்போது சிறந்த தேர்வாக இருப்பதாக கருதுகிறோம். ஏனென்றால் தற்போதைய அரசால் எங்கள் தொழிலில் ஏராளமான இழப்புகளை சந்தித்து வருகிறோம்.

பரசுராமன் (தர்மபுரி): 60 வயதான நான் கமல்ஹாசனின் பேச்சை கேட்பதற்காக காலையிலேயே மதுரை வந்து விட்டேன். சாகும்வரை அவருக்கு நான் ரசிகன். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு வாக்களித்து இருக்கிறேன். நான் இங்கு வந்த பிறகு இனி கமல்ஹாசனுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவேன்.

அருண்குமார்: 18 வயதான நான் முதல் முறையாக ஓட்டு போட இருக்கிறேன். எனது முதல் ஓட்டு கமல்ஹாசனுக்குத்தான்.

செல்வகுமார் (மதுரை): ஆட்டோ டிரைவரான நான் கமல்ஹாசனின் பேச்சை டி.வி.யில் பார்த்தேன். ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அவர் பேசியது என்னை வெகுவாக கவர்ந்தது. அவரது பேச்சை புரிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com