மதுக்கூர் அருகே தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது

மதுக்கூர் அருகே குடும்ப தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மதுக்கூர்:

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி தெற்குதெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது65). இவருடைய மகன்கள் செல்வராஜ் (38), செந்தில்குமார் (35). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. செந்தில்குமார் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மூத்த மகன் செல்வராஜ், அவருடைய மனைவி மற்றும் இளைய மகன் செந்தில்குமாரின் மனைவி ஆகியோர் வசித்து வந்தனர். சம்பவத்தன்று வீட்டில் வைத்து செல்வராஜின் மனைவிக்கும் செந்தில்குமாரின் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வைத்திலிங்கம் தகராறை விலக்கி விட முயன்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியது.

இதைக்கண்ட செல்வராஜ், உன்னால் தான் வீட்டில் தகராறு ஏற்படுகிறது என கூறி தனது தந்தை வைத்திலிங்கத்தை கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த வைத்திலிங்கம் மயங்கி விழுந்தார். இதனால் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்திலிங்கம் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்ப தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் மதுக்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com