திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் சிறுமி கொலை- தந்தை வெறிச் செயல்

குடும்ப தகராறில் மகளை கட்டையால் தாக்கி தந்தை கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் சிறுமி கொலை- தந்தை வெறிச் செயல்
Published on

பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட வி.ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (35).

இவர்களுக்கு இருளாயி (10) என்ற மகளும், வேல்முருகன் (6), மருது (8 மாதம்) என்ற மகன்களும் உள்ளனர். இருளாயி 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மனைவி நடத்தையில் முருகன் சந்தேகம் அடைந்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவரிடம் கோபித்துக் கொண்டு லட்சுமி பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.

சிவராத்திரி விழாவின் போது லட்சுமியை சமரசம் செய்து முருகன் அழைத்து வந்தார். அதன் பிறகு நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முருகன் மனைவியை தாக்கினார்.

இதனைக்கண்டு பயந்து போன மகள் இருளாயி, பக்கத்து கிராமமான உவரியில் வசிக்கும் லட்சுமியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று கூறினாள். அவர்கள் வந்து, முருகனை கண்டித்தனர்.

இது முருகனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இன்று காலை மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது முருகன் மட்டும் எழுந்தார். வீட்டில் இருந்த கோடாரியை எடுத்த அவர், அதன் பின் பகுதியால் மகள் என்றும் பாராமல் இருளாயியை தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு, லட்சுமி கண்விழித்த போது, ரத்த வெள்ளத்தில் இருளாயி பிணமாக கிடந்தார். அதற்குள் முருகன் கோடாரியால் லட்சுமியை வெட்டினார். இதில் அவருக்கு தலை, கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

அதற்குள் அக்கம், பக்கத்தினர் திரண்டதால், முருகன் தப்பி ஓடி விட்டார். காயத்துடன் போராடிய லட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

வில்லூர் போலீசார் விரைந்து சென்று சிறுமி இருளாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

குடும்ப தகராறில் மகளை, தந்தையே கொலை செய்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com