

லக்னோ:
உத்தரபிரதேசத்தின் அரையா மாவட்டத்துக்கு உட்பட்ட தேஜல்பூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக கடந்த 2007-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் மீனா தேவி. இவர் இடா மாவட்டத்துக்கு உட்பட்ட குன்வர்பூர் தொடக்கப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணியமர்த்தப்பட்டார்.
ஆனால் இந்த 2 பள்ளிகளிலும் அவர் ஒரே நேரத்தில் பணியாற்றி 2 மாவட்டங்களிலும் சம்பளம் வாங்கி வந்தது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இரு பள்ளி ஆசிரியர்களின் பெயர், பெற்றோர் பெயர், கல்வி சான்றிதழ்களின் வரிசை எண்கள் போன்றவை ஒரே மாதிரி இருந்ததால் விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த மோசடியை கண்டறிந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து மீனா தேவியிடம் மேலும் விசாரணை நடத்தியதில் அவர் போலி ஆசிரியை என கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் அவர் இதுவரை பெற்ற சம்பள பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.