பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் அச்சடித்து கொடுத்த சிவகாசி அச்சக உரிமையாளர் கைது

கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது மாணவியை தள்ளி கொன்ற பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் அச்சடித்து கொடுத்த சிவகாசி அச்சக உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான ஆறுமுகம்
கைதான ஆறுமுகம்
Published on

கோவை:

கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை கீழே தள்ளி கொன்ற பயிற்சியாளர் ஆறுமுகம்(வயது 31) கைது செய்யப்பட்டார்.

அவர் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறவில்லை என்பதும், போலியாக சான்றிதழ்களை தயாரித்து மாணவ, மாணவிகளுக்கு கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த 17-ந் தேதி முதல் ஆறுமுகத்தை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரை சென்னை அழைத்து சென்று மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கி ருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முத்திரைகளை பயன்படுத்தி சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில் சான்றிதழ்களை அச்சடித்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சிவகாசிக்கு சென்று போலிசான்றிதழ்கள் அச்சடித்து கொடுத்ததாக யோகானந்தம்(50) என்பவரை மடக்கிப்பிடித்தனர்.

ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என தெரியாமல் அவருக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுத்ததாக அவர் கூறினார். எனினும் அரசு முத்திரையுடன் கூடிய சான்றிதழ்களை அச்சடிப்பதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றாமல் யோகானந்தம், சான்றிதழ்களை ஆறுமுகத்துக்கு அச்சடித்து கொடுத்தது ஏன்? எவ்வளவு மாதங்களாக அச்சடித்து கொடுத்தார்? என விசாரணை நடந்து வருகிறது.

ஆறுமுகத்தின் மோசடிகளுக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக அவரது கூட்டாளிகள் 5 பேர், தோழி ஒருவர் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகத்துக்கு கோர்ட்டு அனுமதி வழங்கிய 4 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை இன்று மாலை கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர். #Logeshwari

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com