

ஊட்டி:
கோத்தகிரியில்மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தும்பூர் ஐ. போஜன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் குள்ளா கவுடர், செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகள் பச்சை தேயிலை கொள்முதல் செய்வதில்லை என எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அறிவித்துள்ளது. இது சிறு விவசாயிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேயிலை வாரியம் அறிவித்துள்ள தேயிலையை தான் விவசாயிகள் பறித்து வருகின்றனர். ஆனால் பல கிரேடுகளில் இலை வாங்குவதாக கூறி தொழிற்சாலை உரிமையாளர்கள் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புடியங்கி சிவாஜி, அரக்கம்பை சண்முகம், திம்பட்டி மகேஷ், கீழ்அணையட்டி போசன், கம்பட்டி குப்பன் உள்பட கோத்தகிரி சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். கூட்டத்திற்கு பின் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் தும்பூர் ஐ. போஜன் கூறியதாவது:-
பச்சை தேயிலைக்கு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச கொள்முதல் விலை கடந்த 3மாதங்களாக விவசாயிகளுக்கு தேயிலை தொழிற்சாலைகள் மூலம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கடந்த மாதம் வலியுறுத்தியது.
இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது நிலுவைத் தொகை ரூ.37 கோடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டி இருப்பது தெரியவந்தது. இந்த நிலுவை தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதை ஏற்றுக்கொள்ளாத தேயிலை தொழிற்சாலைகள் கிரேடு முறையில் பச்சை தேயிலையை கொள்முதல் செய்து தரத்துக்கு ஏற்றவாறு முறையான விலை வழங்குவதாக தெரிவித்தது. இதுமட்டும் இன்றி மாவட்டம் முழுவதிலும் உள்ள சிறு விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்வதில்லை எனவும் தேயிலை தொழிற்சாலை சங்கம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெய்த மழைக் காரணமாக தேயிலை தோட்டங்களில் நன்கு மகசூல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை வாங்க மறுப்பு தெரிவித்து இருப்பதால் சிறு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.