பேஸ்புக் காதலனுடன் மகள் திருமணம்: தாய் தூக்குபோட்டு தற்கொலை

திருப்பூரில் பேஸ்புக் காதலனுடன் மகள் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேஸ்புக் காதலனுடன் மகள் திருமணம்: தாய் தூக்குபோட்டு தற்கொலை
Published on

திருப்பூர்:

திருப்பூர் செல்வலட்சுமிநகர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 65). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கருப்பாத்தாள்(58). இவர்களுடைய மகள் தீபா(25). பட்டதாரி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன்(27) என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் தொடர்ந்து காதலித்தனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய தீபா நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தீபாவின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தீபா, தான் காதலித்து வந்த தங்கபாண்டியனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

தனது மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டாள் என்ற தகவல் தெரிந்ததில் இருந்து கருப்பாத்தாள் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com