மலப்புரம் பகுதியில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு - போலீசார் அறிவிப்பு

சிறுமி அசிபா கற்பழித்து கொலைச் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் மலப்புரம் பகுதியில் பிறப்பித்த 144 தடை உத்தரவு ஒரு வாரத்திற்கு அமலில் இருக்கும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
மலப்புரம் பகுதியில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு - போலீசார் அறிவிப்பு
Published on

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சிறுமியை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டனர். நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கேரளாவிலும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்த சமூக ஊடகங்கள் மூலம் சிலர் அழைப்பு விடுத்தனர். முழு அடைப்புக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்காத நிலையில் கேரளாவில் காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில கும்பல் கடைகளை அடைக்க சொல்லியும், போக்குவரத்தை நிறுத்த கூறியும் தகராறில் ஈடுபட்டனர்.

மலப்புரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் டிரைவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். கோழிக்கோடு, தாமரசேரி, குயிலாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலும் நடந்தது. பல இடங்களில் சாலைகளில் தடுப்புகளை போட்டும், டயர்களை கொளுத்தியும் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

கடைகளை அடைக்கச் சொல்லி தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் 11 போலீசார் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருவனந்தபுரத்திலும் பாலராமபுரம், நெய்மம் பகுதிகளில் கல்வீச்சும், கடைகளை மூடச்சொல்லி போராட்டமும் நடந்தது. கல்வீச்சு, வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆலப்புழாவில் 25 பேரும், கண்ணூரில் 15 பேரும் என 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா எச்சரித்தார். மேலும் பதட்டமான பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து சுற்றி வரவும் உத்தரவிட்டார்.

போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி மலப்புரம் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்தன. குறிப்பாக திரூர், தானூர், பரப்பனங்காடி பகுதிகளில் வன்முறை நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com