வீட்டுக்கதவை திறக்காத மனைவியை மிரட்ட துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு வலைவீச்சு

அலங்காநல்லூர் அருகே வீட்டுக்கதவை திறக்காத மனைவியை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 47). இவரது மனைவி கலைச்செல்வி( 39). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

கார்த்திகேயன் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். அதன் பின்னர் அவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவல் பணியாற்றி வந்தார். இவரிடம் துப்பாக்கி இருந்தது. இதற்கான உரிமைத்தை அவர் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

கார்த்திகேயனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம்.

இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு துப்பாக்கியுடன் கார்த்திகேயன் வந்துள்ளார். அப்போது அவரது மனைவி, வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்துள்ளார். பல முறை கதவை திறக்க கூறியும் அவர் கதவை திறக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சுட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். ஆனாலும் அவரது மனைவி கதவை திறக்காததால் அவர் அந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி 2 முறை சுட்டுள்ளார். திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்து பார்த்தனர். இதனை தொடர்ந்து கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதற்கிடையே தன்னை துப்பாக்கியால் சுட்டு மிரட்டியதாக கலைச்செல்வி அலங்காநல்லூர் போலீசில் கணவன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் துப்பாக்கியை காட்டி மிரட்டியது, பெண்ணை கொடுமை செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com