

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்தவகையில் உத்தர பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தகீம் கான் என்ற அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததை புலனாய்வுப்பிரிவினர் கண்டறிந்தனர். எனவே கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக முஸ்தகீம் கானின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் முஸ்தகீம் கான் டெல்லி ரிட்ஜ் ரோடு வழியாக நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றதை டெல்லி பயங்கரவாத தடுப்புப்படை போலீசார் கண்டறிந்தனர். உடனே அவர்கள் தவுலா குவான் மற்றும் கரோல் பாக் பகுதிகளுக்கு இடையே அவரை சுற்றி வளைத்தனர்.
அப்போது முஸ்தகீம் கான், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது சுட்டார். உடனே போலீசாரும் திருப்பி சுட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை மூண்டது. இறுதியில் போலீசார் முஸ்தகீம் கானை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் விரைந்து வந்து, ரோபோ உதவியுடன் அந்த வெடிகுண்டுகளை பத்திரமாக செயலிழக்க வைத்தனர்.
முஸ்தகீம் கான் வைத்திருந்த வெடிகுண்டுகள் இரண்டும் முழுவதும் தயார் நிலையில் இருந்தது. எனவே அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவர் போலீசிடம் சிக்கியிருப்பதன் மூலம் மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.
போலீசாரிடம் முரண்பட்ட தகவல்களை அவர் கூறியுள்ளார். பின்னர், தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். தளபதிகளிடம் முஸ்தகீம் கான் பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையளதளம் வழியாகவும் முஸ்தகீம் கான் தொடர்பில் இருந்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடனும் அந்நபர் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் உள்ள முஸ்தகீம் கானின் சொந்த ஊரான பலராம்பூருக்கு அவரை அழைத்து சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், இரண்டு தற்கொலைப்படை ஜாக்கெட், ஒரு பெல்ட், 9 கிலோ வெடிபொருட்கள், பால் பேரிங்ஸ், ஏழு சிலிண்டரிகள் பாக்ஸ், டைமர், 4 பேட்டரி, ஐஎஸ்ஐஎஸ் கொடி, போர்டு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் நோக்கில் தற்கொலைப்படை ஜாக்கெட் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது.