

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்று கொண்ட யோகி ஆதித்யாநாத் தனது அமைச்சரவையின் சார்பில் மாநில பட்ஜெட்டை சமீபத்தில் தக்கல் செய்தார்.
இந்நிலையில், சட்டசபைக்குள் பாதுகாவலர்கள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது எதிர்க்கட்சி தலைவரான ராம்கோவிந்த் சவுத்ரி இருக்கைக்கு அருகில் வெள்ளை நிற பவுடர் கொண்ட ஒரு பிளாஸ்டிக் கவர் காணப்பட்டது. அதனை பரிசோதித்த தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் மிக ஆபத்தான மூலப்பொருள் என கண்டறிந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சட்டசபையில் வெடி மருந்து கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை இன்று கூட்டினார். இதில், வெடிமருந்து எப்படி வந்தது என்பது குறித்து ஆராய, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராயும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை வாசலில் மோப்ப நாய்கள் காவலுக்கு இருந்தும் வெடி மருந்து உள்ளே வந்தது எப்படி? இதில் பாதுகாப்பு குளறுபடிகள் அதிகம் உள்ளது என இன்றைய சட்டசபை கூட்டத்தின்போது குறிப்பிட்டமுதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இதுதொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சட்டசபை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.