பெங்களூரு: டிரம்ப் மகளை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பூந்தொட்டிகள் திருட்டு

சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டிற்காக ஐதராபாத் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மகளை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான அலங்காரப் பூந்தொட்டிகள் திருடு போயுள்ளது.
Published on

ஐதராபாத் நகரில் கடந்த நவம்பர் 29-ம் தேதி சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவாங்கா கலந்துகொண்டார். அவர் வருகையையொட்டி ஐதராபாத் நகரை எழில் நகரமாக காட்சிபடுத்துவதற்காக விலை உயர்ந்த பூந்தொட்டிகள் வாங்கப்பட்டிருந்தன.

அவர் வருகையின் போது ஐதராபாத்தின் ஐடி காரிடார் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றில் சில பூந்தொட்டிகளை சில மர்ம நபர்கள் திருடு சென்றுவிட்டதால் ஒரு வாரத்திற்குப் பிறகு அவை பழைய நிலைக்கே வந்துவிட்டன. இதனால் எஞ்சியவையும் திருடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஐதராபாத் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வண்ண அலங்கார பூந்தொட்டிகள் திருடப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஐதராபாத் மாநகராட்சி சார்பில் கொண்டபூர் - கச்சிபவுலி இடையிலான பகுதியில் சுமார் 5 ஆயிரம் பூச்செடி வைக்கப்பட்டிருந்தது.

அந்த பூந்தொட்டிகள் ஒவ்வொன்றின் மதிப்பு ரூ. 6 ஆயிரமாகும். அவை யானை முக உருவம், அன்னப்பறவை உருவம் என விலங்குகளின் உருவ அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தன. அந்த அலங்காரப் பூந்தொட்டிகள் தான் தற்போது திருடுபோயுள்ளன.

அலங்காரப் பூந்தொட்டிகளை திருடியது யார் என்று சிறப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com