அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையில் போலீஸ் அதிகாரி விடுதலை

கருப்பு இனத்தை சேர்ந்த அந்தோணி லாமர் ஸ்மித் படுகொலையில் வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஜேசன் ஸ்டாக்லி விடுதலை செய்யப்பட்டதால் போராட்டம் வெடித்தது.
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையில் போலீஸ் அதிகாரி விடுதலை
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் மிசவுரி மாகாணத்தில் கடந்த 2011-ம் ஆண்டு, அந்தோணி லாமர் ஸ்மித் (வயது 24) என்ற கருப்பு இனத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஜேசன் ஸ்டாக்லி என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை செயின்ட் லூயிஸ் சர்க்கியூட் கோர்ட்டில் நீதிபதி தீமொத்தி வில்சன் விசாரித்து வந்தார்.

விசாரணை முடிவில் ஜேசன் ஸ்டாக்லியை விடுதலை செய்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.

தீர்ப்பில், “ஜேசன் ஸ்டாக்லி மீதான கொலை குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியவில்லை. சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்படுகிறார்” என நீதிபதி தீமொத்தி வில்சன் கூறி உள்ளார்.

இந்த தீர்ப்பு தம்மை ஏமாற்றம் அடையச்செய்துள்ளதாக அரசு வக்கீல் கிம்பர்லி கார்ட்னர் கருத்து தெரிவித்துள்ளார்.

கருப்பு இனத்தை சேர்ந்த அந்தோணி லாமர் ஸ்மித் படுகொலையில் வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஜேசன் ஸ்டாக்லி விடுதலை செய்யப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செயின்ட் லூயிஸ் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு போராட்டம் வெடித்தது. இதில் கருப்பு இனத்தவர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com