போலீசார் தாக்கியதால் கொத்தனார் தற்கொலையா?- உறவினர்கள் போராட்டம்

போலீசார் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கொத்தனாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். (கணேசமூர்த்தி)
எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். (கணேசமூர்த்தி)
Published on

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கணேசமூர்த்தி (வயது 26). கொத்தனார். இவருக்கு ராமலட்சுமி (21) என்ற மனைவியும், காளிதாஸ் (3) என்ற மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று கணேசமூர்த்தி மதுபோதையில் தனது மோட்டார் சைக்கிளில் எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் சென்றதாகவும், அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த எட்டயபுரம் போலீசார் கணேசமூர்த்தியிடம் விசாரித்து, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த கணேசமூர்த்தி எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதனால் மனமுடைந்த கணேசமூர்த்தி நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, கணேசமூர்த்தி தனது சாவுக்கு போலீசார் தான் காரணம் என நோட்டில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று, கணேசமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, கணேசமூர்த்தியின் சாவுக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று காலையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. சின்னப்பன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பீர் முகைதீன் (விளாத்திகுளம்), ரவிச்சந்திரன் (மணியாச்சி), தாசில்தார் அழகர், பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அதிகாரிகள் கூறுகையில், கணேசமூர்த்தியின் மனைவி ராமலட்சுமிக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க ஏற்பாடு செய்வதாகவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து கணேசமூர்த்தியின் குடும்பத்தினரிடம் ரூ.4 லட்சம் நிவாரண நிதியை சின்னப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் கணேசமூர்த்தியின் உடலை குடும்பத்தினர் பெற்று சென்று, இறுதிச்சடங்கு நடத்தி தகனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com