

தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் மக்கள் இன்று 51-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் மக்களோடு அமர்ந்து போராட்டத்திலும் பங்கேற்றார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.குமரெட்டியாபுரம் கிராமம் தொடக்கத்தில் வெளியில் தெரியாமல் இருந்தது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தால் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் கிராமமாக மாறிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆட்சியாளர்கள் ஆதரவாக உள்ளனர். அவர்கள் எத்தனை நாள் இருப்பார்கள் என்பது தெரியாது.
ஆனால் உங்களுடைய போராட்டம் தொடர வேண்டும். இங்குள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் யாரும் உங்களை சந்திக்க வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு லைசென்ஸ் காலாவதியாகி விட்டது. மீண்டும் அது இயங்க அனுமதி அளிக்க கூடாது.
ஸ்டெர்லைட் ஆலை, காவிரி பிரச்சனை உள்ளிட்ட எதுவானாலும் மத்திய அரசு தமிழர்களை ஒதுக்குகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது அடக்குமுறையை ஏவினால் நாங்கள் பொதுமக்களுக்கு ஆதரவாக நிற்போம். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி விரைவில் சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பொதுச்செயலாளர் சந்திரசேகர், அமைப்பு செயலாளர் கணேசன், துணை பொதுச்செயலாளர் இளஞ்சேரன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஜான்கென்னடி, லூர்து அந்தோணி, விஜய் ஆனந்த், முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். #Tamilnews