முகமது மோர்சி மரணம் குறித்து விரிவான விசாரணை தேவை: துருக்கி அதிபர் வலியுறுத்தல்

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கி அதிபர்
துருக்கி அதிபர்
Published on

ஒசாகா:

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி(67). இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க கடந்த 2013-ம் ஆண்டு கடுமையான போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகள்  அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.

இதனிடையே வழக்கு விசாரணைக்காக மோர்சி கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், முகமது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20  உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த எர்டோகன்,  ’எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களும் வலியுறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com