எண்ணூரில் 3 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி கும்பல்

எண்ணூரில் 3 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
எண்ணூரில் 3 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி கும்பல்
Published on

திருவொற்றியூர்:

எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டியன் (வயது32). பிரபல ரவுடி.

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் சின்ன மேட்டுபாளையத்தை சேர்ந்த யாதவ சங்க தலைவர் பாண்டியமணி, மாட்டு மந்தை தெருவைச் சேர்ந்த கேட்சுப்பிரமணி ஆகியோரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.

கடந்த 21-ந் தேதி சுனாமி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்தபோது மர்ம கும்பல் பாண்டியனை வெட்டி கொலை செய்தனர்.

இது சம்பந்தமாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவொற்றி யூர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன், மோகன், மோகன்ராஜ், அருண்ராஜ், பிரபாகரன், சரண் ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கைதான கங்காதரனின் சகோதரரான முருகன் என்பவர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு நண்பர்கள் சிலருடன் பேசியபடி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் முருகன் மற்றும் அவரது நண்பர்களான வினோத், ஹரிகரன் ஆகிய 3 பேரையும் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். சத்தம் கேட்டு பொது மக்கள் திரண்டதும் கொலைவெறி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து எண்ணூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த முருகன் உள்பட 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே கொலையுண்ட பாண்டியனின் மைத்துனரான தமிழ், மற்றும் அவரது கூட்டாளி ஆகாஷ் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com