கோவையில் என்ஜினீயரிங் மாணவர் குத்தி கொலை- 3 வாலிபர்கள் வெறிச்செயல்

கோவையில் செல்போன் பறிக்கும் முயற்சியில் என்ஜினீயரிங் மாணவரை குத்தி கொலை செய்த 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள நடு அரசூர் சடையன் தோட்டத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 20). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று இரவு தமிழ் செல்வன் கல்லூரி படிப்பு வேலை சம்பந்தமாக அரசூருக்கு சென்றார். வேலை முடிந்ததும் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்றார். சரவணம்பட்டி ரோடு சடையன் தோட்டம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் தமிழ் செல்வனை மிரட்டி அவரது செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் தமிழ் செல்வன் செல்போனை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தமிழ் செல்வனின் இடது பக்க மார்பில் குத்தினர். இதில் நிலைகுலைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழ் சரிந்தார்.

இதனை பார்த்த அந்த வாலிபர்கள் 3 பேரும் அங்கு இருந்து மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் செல்வன் நடந்த சம்பவம் குறித்து செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அவர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் செல்வனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தமிழ் செல்வனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பு முயற்சியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com