

சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. என்ஜினீயரிங் விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று முதல் பிளஸ்-2 மதிப்பெண்களை பதிவு செய்து அதை பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம்.
நேற்று வரை 8 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் 200-க்கு 200 மதிப்பெண்களை 3 ஆயிரத்து 656 பேர் எடுத்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 295 பேர் அதிகம். இயற்பியல் தேர்வில் 187 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள். கடந்த வருடத்தை விட 182 பேர் கூடுதலாக பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்களை 1,123 பேர் எடுத்து உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 500 பேர் குறைவு ஆகும்.
கணிதத்திலும், இயற்பியலிலும் மதிப்பெண் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஈரோடு கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி கூறுகையில், என்ஜினீயரிங் கட் ஆப் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு .25 மதிப்பெண்ணுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இந்த ஆண்டு உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன் காரணமாக வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவ கட் ஆப் மதிப்பெண்ணில் 1 குறையும் என்றார்.