

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது குறித்து என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் கூறியதாவது:-
நாசா எடுத்த நிலவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதில் ஒரே ஒரு சிறிய புள்ளியை தவிர வேறு மாற்றங்கள் தெரியவில்லை. எனவே அந்த புள்ளிதான் லேண்டரின் பாகங்களாக இருக்கும் என அக்டோபர் மாதம் 3-ந்தேதி நாசாவுக்கு டுவீட் செய்தேன். இது தொடர்பாக இ-மெயிலும் அனுப்பினேன்.
என் கண்டுபிடிப்பு குறித்து நாசா பதில் அளிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என்று எனக்கு தெரியும். அவர்கள் தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து, பின்னர் என்னுடைய தகவலை வைத்து ஆராய்ச்சி செய்தபோது நாசாவினால் எளிதாக விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க முடிந்தது.
செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நாசா எடுத்த புகைப்படம் இருளில் எடுக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. பிறகு அக்டோபர் 15-ந்தேதி புகைப்படத்தில் லேசான வெளிச்சம் இருந்தது. ஆனால் நாசாவினால் கண்டுபிடிக்க முடியவில்லை.
லேண்டர் தரை இறங்கிய குறிப்பிட்ட இடம் பற்றி எனக்கு தெரியாது. நான் இணையதளத்தில் தகவலை சேகரித்தேன். அதன் மூலமே ஆய்வை தொடர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.