குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

கரூர்:

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம், சுப்பையாபிள்ளை லேயவுட், சின்னாண்டான்கோவில் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் கரூர் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வந்த பெண்கள் நேற்று காலை சின்னாண்டான்கோவில்- கரூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் மற்றும் கரூர் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சின்னாண்டான்கோவில்- கரூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com