கோபி அருகே ரோட்டில் காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்

கோபி அருகே இன்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படாததை கண்டித்து ரோட்டில் காலி குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோபி அருகே ரோட்டில் காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்
Published on

கோபி:

சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி இண்டியம்பாளையம். இங்கு கடந்த சில நாட்களாகவே ஆற்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லையாம்.

இது குறித்து அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் இண்டியம் பாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள்- பெண்கள் அப்பகுதியில் உள்ள சத்தி- ஈரோடு மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் திரண்டனர்.

திடீரென அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் விரைந்து சென்றனர். பி.டி.ஓ.வும் சென்றார். அவர்கள் சாலைமறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தான் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

விரைவில் அது சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதை தொடர்ந்து சாலைமறியல் நடத்திய பொதுமக்கள் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com