அரூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

அரூர் அருகே குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலி குடங்களுடன் மறியல்.
காலி குடங்களுடன் மறியல்.
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், அரூர் மாம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட குமாரம் பட்டி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதங்களாக இந்த பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கவில்லை. மேலும் குடிநீர் தேவைக்காக புதிதாக ஒரு ஆழ்துளை கிணறு போர் போடப்பட்டு அதில் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது. ஆனால் தற்போது அது பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால்  இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திர மடைந்த பெண்கள் இன்றுகாலை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் திருப்பத்தூர்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை குமாரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அரூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிநாத் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் முறையாக வழங்கவில்லை. இதற்கு நாங்கள் பலமுறை புகார் கூறினோம். ஆனால் இதுவரைக்கு எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை என்று கூறினர். 

இதற்கு அதிகாரி உங்கள் பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதனால் அவரது பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com