60 அடி உயர டவரில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் வேலையை விட்டு நீக்கியதால் 60 அடி உயர டவரில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
60 அடி உயர டவரில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தவர் தனசேகர். நிலக்கரி கையாளும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டதற்காக ஊழியர் தனசேகர் மற்றும் ஒருவரை ஒப்பந்த நிறுவனம் வேலையை விட்டு நிறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனசேகர் இன்று காலை 7 மணிக்கு அனல்மின் நிலையத்துக்கு வந்தார்.

அப்போது ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர், நிலக்கரி கன்வேர் பெல்ட் உள்ள சுமார் 60 அடி உயர டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பணியில் மீண்டும் சேர்க்க வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வர வேண்டும் என்று தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தனசேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் காலை 10 மணியளவில் அவர் கீழே இறங்கினார். இதனால் அனல்மின் நிலைய பகுதி சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதற்கிடையே தனசேகருக்கு ஆதரவாக மேலும் 4 ஒப்பந்த ஊழியர்கள் டவரில் ஏற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கீழே இறங்கச் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com