சரவணம்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் கைது

சரவணம்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சரவணம்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் கைது
Published on

கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எஸ்.ஆர்.பி. மில்லை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தூர் கார்டன் பகுதியில் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக பிள்ளையார் நகரை சேர்ந்த ஆனந்தன் (30) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும் ரமேசும் ஒன்றாக கூலி வேலைக்கு செல்வோம். ரமேசுக்கு கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தில் சொந்தமாக வீடு உள்ளது. இதனை அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார். மாதம் மாதம் வாடகை வசூல் செய்வதற்காக ரமேஷ் வருவது வழக்கம். அதே போல சம்பவத்தன்று ரமேஷ் வாடகை வசூல் செய்வதற்காக இங்கு வந்தார்.

பின்னர் நானும் அவரும் சேர்ந்து மது குடிக்க திட்டம் போட்டோம். மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு செந்தூர் கார்டன் பகுதியில் வைத்து மது குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நான் ரமேசை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து ரமேசின் தலையில் தாக்கி கொலை செய்தேன்.

பின்னர் தலைமறைவானேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் ஆனந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com