

நீலகிரி மாவட்டம் சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட பொக்காபுரத்தில் ஒரு தனியார் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு குட்டி யானை இறந்துகிடந்தது. அதன் அருகே தாய் யானை உள்பட 2 யானைகள் நின்றுகொண்டு இருந்தன. இதைப் பார்த்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டு குட்டி யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக பட்டாசு வெடித்து அந்த 2 யானைகளையும் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானைகள் அங்கிருந்து செல்லாமல் பாச போராட்டம் நடத்தின. வனத்துறையினர் குட்டி யானையின் உடல் அருகே செல்ல முயன்றபோது, 2 யானைகளும் நெருங்கவிடாமல் வனத்துறையினரை துரத்தின.
யானைகளிடம் இருந்து தப்பிக்க வனத்துறையினர் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் மீண்டும் 2 யானைகளும் குட்டியின் உடல் அருகே சென்று நின்றன. குட்டியின் உடலை சுற்றிவந்த தாய் யானை அதை துதிக்கையால் தட்டிக்கொடுத்தபடி நின்றது.
வனத்துறையினர் மீண்டும் அந்த யானைகளை பட்டாசு வெடித்தும், வாகனத்தின் ஒலி எழுப்பியும் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானைகள் வனத்துறையினரின் வாகனத்தை விரட்டி தாக்க முயன்றது. வனத்துறையினர் மாலை வரை தொடர்ந்து போராடியும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னர் இரவு நேரம் நெருங்கிவிட்டதால் மேற்கொண்டு யானைகளை விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இன்று (வியாழக்கிழமை) மீண்டும் யானைகளை விரட்டிவிட்டு, குட்டி யானையின் உடலை மீட்கும் நடவடிக்கை தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே குன்னூரை அடுத்த கீழ்சிங்காரா எஸ்டேட் அருகே நேற்று மாலை 4 மணி அளவில் பிறந்து ஒருசில நாட்களே ஆன மற்றொரு குட்டி யானை இறந்துகிடந்தது தெரியவந்தது. அதன் அருகே வனத்துறையினர் சென்றபோது வனப்பகுதிக்குள் இருந்து ஒரு யானையின் பிளிறல் சத்தம் ஆக்ரோஷமாக கேட்டது.