13 மாதங்களில் கட்டப்படும் யானைகவுனி புதிய பாலம்

யானைகவுனி புதிய பாலம் 13 மாதங்களில் கட்டப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
யானை கவுனி பாலம்
யானை கவுனி பாலம்
Published on

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கடந்த 1933-ம் ஆண்டு கட்டப்பட்ட யானைக்கவுனி மேம்பாலம் மிகவும் பழமையான பாலங்களில் ஒன்றாகும்.

இந்த மேம்பாலத்துக்கு அடியில் 8 தண்டவாளங்கள் செல்கின்றன. இதற்கிடையே சென்ட்ரல் பணிமனையின் விரிவாக்க பணிகள், சென்ட்ரல் ரெயில் நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமானால், இந்த பாலத்தை அகலப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த பாலத்தில் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலை பகுதியை மட்டுமே மாநகராட்சி பராமரித்து வந்தது. பழமையான இந்த பாலம் மிகவும் பழுதடைந்ததால், கனரக வாகனங்கள் செல்வதற்கு ரெயில்வே துறை மற்றும் போக்குவரத்து துறை தடை விதித்தது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன.

இந்நிலையில் யானைக்கவுனி பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கும் என்று கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயில்வே துறை அறிவித்தது. ஆனால் இந்த பணிகளை தொடங்குவதில் தாமதம் நிலவியது.

இந்த மேம்பாலத்தை இடிக்க வேண்டுமானால், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில் சேவையை நிறுத்தி 72 மணி நேரம் இதற்காக செலவு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ரெயில் சேவை மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டது.

இதைப் பயன்படுத்தி தெற்கு ரெயில்வே, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு பழமையான இந்த பாலத்தை இடிக்கும் பணியை துரிதப்படுத்தினர்.

இதன் பயனாக கடந்த ஏப்ரல் 27-ந் தேதி இந்த பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது. 25 தொழிலாளர்கள், இரண்டு பெரிய கிரேன்கள் மற்றும் எந்திரங்களுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணியை தொடங்கினர். 12 நாட்களில் பாலம் இடித்து அகற்றப்பட்டது.

புதிய பாலம் கட்டும் பணிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

யானைக்கவுனி மேம்பாலத்தை கடந்த 2002-2009-ம் ஆண்டு ரூ.43.77 கோடி செலவில் மறு சீரமைக்கும் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கை பயன்படுத்தி இந்த பாலம் இடிக்கப்பட்டது. நாங்கள் விரைவில் புதிய பாலம் கட்டுவதற்கான பணியை தொடங்குவோம். 13 மாதங்களில் புதிய பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com