

குன்னம்:
பெரம்பலூரை அடுத்த குன்னம் தாலுகா எழுமூர் ஊராட்சி மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அமிர்தம் (வயது 45). நேற்று மதியம் இவர், ஆண்டிக்குரும்பலூர்-எழுமூர் சாலையில் உள்ள வயல்காட்டில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு ஒரு மின்கம்பத்தில் உள்ள ஒரு மின்கம்பி அறுந்து கிடந்தது. அந்த மின்கம்பியை பசுமாடு மிதித்தது. இதில் மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அந்த மாடு சுருண்டு கீழே விழுந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமிர்தம் மாட்டை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அமிர்தத்தின் வளர்ப்பு நாய் ஒன்று தாவி வந்த போது அதன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் மின்சாரம் பாய்ந்து அமிர்தம் பரிதாபமாக இறந்தார். மேலும் பசுமாடு, நாய் ஆகியவையும் மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே செத்தன.
இது குறித்து தகவல் அறிந்த தும் சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் அமிர்தத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றுடன் மழை பெய்த போதே மின்கம்பி அறுந்து கிடந்ததை அப்பகுதி விவசாயிகள் பார்த்திருக்கின்றனர். இது குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த விபத்து நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் மழவராயநல்லூர்பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களையும், மின் கம்பிகளையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.